அன்புடன் நாள்

Saturday, October 08, 2005

முதல் நாள் முதல் காட்சி

கல்லூரியில் படிக்கும் போது இந்த பழக்கம் வந்தது. அதாவது எந்த சினிமா என்றாலும் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்து விடுவது. முதல் நாள் முதல் காட்சி என்றால் நீங்கள் திரைப்படத்தில் பார்ப்பதுப் போல் குழுவாக செல்லாமல் பெரும்பாலும் தனியாகவே செல்வது வழக்கம். ஆனால் முதல் நாள் முதல் காட்சி(முநமுகா)க்காக என்னைப் போலவே சுமார் இருபத்தைந்து பேர் வருவார்கள். அதில் சிலர் என்னுடன் பள்ளியில் படித்தவர்கள். உள்ளுரிலேயே இருந்தாலும் அவர்களை நான் சந்திக்கும் இடம் ஓரே இடம் திரையரங்கம் தான். சரியாக ஒவ்வோரு படம் வெளியாகும் போதும் முதல் காட்சியில் சந்தித்துக்கொள்வோம். எங்கள் ஊர் சிறியது என்பதால் ரஜினி விஜய் தவிர மற்ற படங்களுக்கு அதிக கூட்டம் இருக்காது. முநமுகாவிக்கு மாணவர்கள் வாலிபர்கள் தான் வருவார்கள் என்று நினைக்காதீர்கள். ஒய்வு பெற்றவர்கள் மார்க்கெட்டிங் செய்பவர்கள் எல் ஜ சி ஏஜண்ட்டுகள் எனப்பல தரப்பட்டவர்களும் வருவார்கள்.

பின்பு கல்லூரிப் படிப்பு முடிந்ததும் சென்னையில் இருந்த போது அந்த பழக்கம் மெல்ல குறைந்து பின்பு அது அறவே இல்லாமல் போனது. பின்னர் எனது வியாபாரத்தை எனது சொந்த ஊருக்கு மாற்றிக் கொண்டாலும் வேலைப்பளு காரணமாக இரவுக் காட்சிக்கு மட்டும் தான் செல்ல முடிந்தது. சமீபத்தில் 'புதுப்பேட்டை'க்கு முதல் நாள் முதல் காட்சிக்கு செல்ல வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் பெரும்பாலான பழைய நண்பர்களை காண முடியவில்லை, ஆனாலும் இரண்டு பேர்களை காண முடிந்தது. மற்றவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள். உடனே எனது மனதில் 'ஆட்டோகிராப்' ஓடியது.
புதுப்பேட்டைக்கு முதல் காட்சிக்க சென்றதை நண்பர்களிடம் சொன்ன போது அவர்கள் சொன்னது 'என்ன சின்னப்புள்ளதனமாகயிருக்குது'. ஏனுங்க! அப்படியா!

குறிப்பு: இது என் முதல் பதிவு.